கனல் கண்ணனைக் கைது செய்தால் இந்துக்கள் பெருமளவு தமிழகம் முழுவதும் அதிருப்தி அடைவார்கள் என அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
சுதந்திர தின பவள விழாவை ஒட்டி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அர்ஜுன் சம்பத் பின்னர் அக்னிபாத் திட்டம் குறித்து தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், “திமுகவை திராவிடர் கழகம் கைப்பற்றி உள்ளது. ஸ்டாலினை தி.கவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமே திமுக தான். ஆனால் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என தெரிவித்தார் .
திராவிட இயக்கங்கள் தலை எடுத்ததால், தேசிய தலைவர்கள் சிலை புறக்கணிக்கப்படுகிறது என்றும், தேசிய தலைவர்களை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்ட அவர், “தேசிய தலைவர்களின் சிலைகள் கூண்டுக்குள் இருக்கிறது. திராவிட இயக்கங்களின் சதி. பக்தவச்சலத்தின் சிலை பராமரிக்கப்பட வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தார்.
மேலும், “கனல் கண்ணனுக்குக் கருத்துரிமை உண்டு. சட்டப்பூர்வமாக அவர் பேசியுள்ளார். திமுக அரசு பழிவாங்கும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறது. கனல் கண்ணனைக் கைது செய்தால் இந்துக்கள் பெருமளவு தமிழகம் முழுவதும் அதிருப்தி அடைவார்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.







