அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதியை மாற்றக்கோரிய விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மன்னிப்பு கோரப்பட்டது
கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ஜூலை 11ந்தேதி பொதுக் குழு செல்லாது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால் இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. இந்நிலையில் ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டபோது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓபிஎஸ் குறித்து தெரிவித்த கருத்துக்களை சுட்டிக்காட்டி, வழக்கிலிருந்து அவரை மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரியிடம் முறையிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதியை மாற்றக்கோருவது கீழ்த்தரமான செயல் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஓபிஎஸ் தரப்பைக் கண்டித்திருந்தார். இதையடுத்து இந்த கருத்துக்கு எதிராகவும் தலைமை நீதிபதியிடம் முறையிட்ட ஓபிஎஸ் தரப்பு, ஜூலை 11ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான வழக்கிலிருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்றக்கோரி, மீண்டும் கோரிக்கைவிடுத்தது.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுக் குழு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியை மாற்றக்கோரியதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது.
வழக்கில் தங்கள் முன்பே வாதங்களை முன் வைக்க விரும்புவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் அளித்த
மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு
உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, இரு நாட்களுக்கு முன் தன் முன்
முறையிட்டிருந்தால் விசாரணையில் இருந்து தாம் விலகியிருப்பேன் எனத் தெரிவித்தார்.
சற்று நேர அவகாசத்துக்கு பின், தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப்
பெற்றது குறித்து ஓபிஎஸ் தரப்பில் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை
எனவும் புதிய நீதிபதி வழக்கை விசாரிக்க வேண்டும் என்பதற்காகவே கடிதம்
அளித்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த மனுவை பதிவு செய்து கொண்டு, வழக்கை தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவதா? வேண்டாமா? என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் எனத் தெரிவித்தார்.