ரேஷன் அரிசி கடத்தலில் ரேஷன் அரிசி விற்பனையாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் தமிழக அரசு தெளிவான பழைய முறையை கடைபிடிக்காமல் புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகிறது. தமிழக அரசு தெள்ளத் தெளிவாக பொதுமக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
நியாய விலை கடைகளில் மக்கள் பயன்படுத்தக்கூடிய தரமான அரிசிகள் வழங்கப்படுகிறது. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு அதற்குரிய கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடைய நிதி மற்றும் ஏனைய நிதிகளை பயன்படுத்தப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று செயல்படுத்தி வருகிறோம்.
முந்தைய காலத்தில் இருந்து அதை விட தற்போது நியாய விலை கடைகளில் அனைத்து பொருட்களும் 30 நாட்களுக்குள் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.
அப்போது நியாய விலைக் கடைகளில் பொருட்கள் முழுமையாக சென்றடைவதில்லை என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் பெரியசாமி கூறியதாவது:
குறைகளை நீக்குவதற்கு நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் தவறு செய்திருந்தால் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் வர உள்ளது. வருகிற ஜனவரி மாதத்தில் முதல்வருடன் கலந்து ஆலோசனை செய்து குளறுபடுகளை தீர்க்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரேஷன் அரிசி கடத்தல்காரர்கள் மீது தகுந்த நடவடிக்கை இல்லாதது தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு காரணம் என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது எந்த ஒரு பாரபட்சமும் அரசு தயக்கம் காட்டுவதில்லை. உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது முதல்வரின் உத்தரவின் பேரில் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறார். ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அரசு அதை செய்கிறது. ஓரிரு நபர்கள் செய்யும் தவறுகளை நடக்காமல் தடுப்பதற்கு தமிழக அரசு வழிமுறைகள் மேற்கொள்ளும்” என்றார்.
மேலும் அவ் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அளித்த பதிலளித்து கூறியதாவது:
கூட்டுறவு துறையில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு பல சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக முன்வந்து அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். பகுதி நேர கடை என்பது தற்போது 150 கார்டுகள் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு தனியாக ஒரு கடை என தற்போது தமிழக அரசு கொண்டுவந்துள்ளது., இதுவே எதிர்காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
குறிப்பிட்ட சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார்கள் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் போதைப் பொருள் விற்பனை பழக்கத்தை ஒரே ஆண்டில் முழுமையாக தடுத்து நிறுத்திய அரசு திமுக அரசு. பத்தாண்டு ஆட்சிக்கும் ஓராண்டு ஆட்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. போதைப் பொருள் தடுப்பதற்கு தமிழக முதல்வர் சீரிய முயற்ச்சி எடுத்து வருகிறார்.
போதைப்பொருள் கொண்டு வரும் மற்றும் பயிர் செய்யும் இடங்களை கண்டறிந்து., வியாபாரம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதை பொருள் சம்பந்தமாக தென் தமிழகத்தில் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் தற்போது போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது.
தமிழக அரசு குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை கருதி மிக விரிவாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனுடைய நிலைப்பாடு தான் இனி தமிழகத்தில் இதுவரை அரசியல் சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க உள்ளோம். அதற்கான சில வழிமுறைகளை முதல்வர் வழங்கியுள்ளார். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு போதை பொருள் தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடக்க உள்ளது என்றார் அமைச்சர் ஐ.பெரியசாமி.








