44வது செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பிரதமர் மோடி தமிழில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுமார் 100 ஆண்டுகால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் கடந்த 13 நாட்களாக நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 180க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொண்டன.
அதிக நாடுகள் பங்கேற்பு, அதிக பெண்கள் அணி பங்கேற்பு, முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் தீபம் ஏற்றப்பட்டது என பல்வேறு விஷயங்களில் தனித்துவம் பெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கட்சி பேதங்களை கடந்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளர். இது தொடர்பாக தமிழில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழ்நாடு மக்களும், அரசும் சிறப்பாக நடத்தியுள்ளதாக பாராட்டுத் தெரிவித்துள்ளார். உலகெங்கிலுமிருந்து இந்த போட்டியில் பங்கேற்றவர்களை வரவேற்று, நமது மகத்தான கலாச்சாரத்தையும், விருந்தோம்பல் பண்பையும் பறைசாற்றியதற்கு பாராட்டுக்கள் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.









