உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்து குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதியாக இவருக்கு முன்பு இருந்த…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமனம் செய்து குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். இவரை தலைமை நீதிபதியாக இவருக்கு முன்பு இருந்த என்வி ரமணா பரிந்துரை செய்திருந்தார். வரும் நவம்பர் மாதம் 8 ம் தேதியுடன் யு.யு.லலித்தின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யும்படி மத்திய அரசு தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித்திற்கு கடந்த 7ம் தேதி கடிதம் எழுதியிருந்தது. இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி பரிந்துரைத்தார்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமித்து குடியரசுதலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்பார்.

கடந்த 1998-ம் ஆண்டு கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட், 2013ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். உச்சநீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் 2024-ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை இவர் தலைமை நீதிபதியாக நீடிப்பார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.