மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சுத்திகரிப்பு ஆலையில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர். எரிவாயு கலக்கும் ஆலையில் வெந்நீர் விழுந்ததில் தொழிலாளர்கள் தீக்காயம் அடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் ஹல்டியா சுத்திகரிப்பு மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு கொல்கத்தா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பரில், ஐஓசியின் ஹால்டியா சுத்திகரிப்பு ஆலையில் உள்ள நாப்தா-ஹைட்ரஜன் கலவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழநத்தனர். மேலும் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் ஒரு யூனிட்டில் பணிநிறுத்தம் தொடர்பான பணியின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ஐஓசி சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல ழிற்சாலைகளின் உரிமையாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தினார்.
இந்நிலையில் சரியாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் சுத்திகரிப்பு நிலையத்தில் மற்றொரு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அவசரநிலை ஏற்பட்டால், சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் சிறந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவமனை அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







