பல்வேறு திருப்பங்களை கடந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் இன்று அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. 96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த ராகுல்காந்தி கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த படுதோல்வியை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அக்கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து வந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில் அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர், ஜார்க்கண்ட் முன்னாள் அமைச்சர் கே.என்.திரிபாதி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இவர்களில் கே.என்.திரிபாதி வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இறுதியாக களத்தில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 137 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் காங்கிரஸ் தலைவர் பதவி தேர்தல் வாக்கெடுப்புவரை செல்வது இது 6வது முறையாகும். கடைசியாக கடந்த 2000ம் ஆண்டு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. மாநிலங்களில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களிலும், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றன.
பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களாக உள்ள 9 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 96 சதவீதம் பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.







