MBA / MCA / ME / M.Tech / M.Arch படிக்க விரும்புபவரா நீங்கள்? TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நேரமிது!

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில்  எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு…

TANCET மற்றும் CEETA நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்ப தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில்  எம்.பி.ஏ, எம்.சி.ஏ ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு TANCET நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதுபோல எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் போன்ற பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கும் CEETA  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

அந்த வகையில் 2024- 2025 ஆம் கல்வியாண்டிற்கான TANCET மற்றும் CEETA  நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;

‘இந்த ஆண்டு வரும் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. அதனால், டான்செட் மற்றும் சீட்டா ஆகிய தேர்வுகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், https://tancet.annauniv.edu/tancet/index.html என்ற இணையதளத்தில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எம்.சி.ஏக்கு விண்ணப்பிப்போருக்கு மார்ச் 9ஆம் தேதி காலையிலும், எம்.பி.ஏக்கு விண்ணப்பிப்போருக்கு அதே தேதி பிற்பகலிலும் தேர்வு நடைபெறும். முதுநிலை பொறியியல் படிப்புக்கான சீட்டா தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 10ஆம் தேதி தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வுகள் மாநிலம் முழுவதும் 14 நகரங்களில் நடத்தப்படவுள்ளது. மேலும், டான்செட் மற்றும் சீட்டா தேர்வுக்களுக்கான விரிவான தகவல் நாளை (07-01-24) வெளியிடப்படும்’ என அறிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் https://tancet.annauniv.edu/tancet தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இரு தேர்வுகள் குறித்த தகவல்களையும் இந்த பொதுவான இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் எழுத உள்ள மாணவர்களும் இந்த தேர்வுக்கு பதிவு செய்யலாம் என்றும் இதற்கு மதிப்பெண் சான்றிதழ் அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

TANCET தேர்வுக்கு SC, ST மாணவர்களுக்கு 500 ரூபாய் கட்டணமும், மற்ற மாணவர்களுக்கு 1000 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. CEETA – PG தேர்வுக்கு SC மாணவர்களுக்கு 900 ரூபாய் உடன் ஜிஎஸ்டி 400 ரூபாயும், மற்ற மாணவர்களுக்கு 1800 ரூபாய் உடன் ஜிஎஸ்டி 800 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.