அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனது கிரெடிட் கார்டை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தற்போது அமெரிக்காவில் பிரீமியம் கிரெடிட் கார்டு சேவையை வழங்கி வருகிறது. இது மாஸ்டர்கார்டு மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் உடன் இணைந்து இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சொந்த கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
இதன்படி இந்தியாவில் ‘ஆப்பிள் பே’ தொடங்குவதற்கு NPCI – உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவில், வங்கிகள் மட்டுமே கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்த முடியும், அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் மொபைல் ஃபோன்கள் மூலம் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் தடையற்ற மற்றும் வேகமாக பணம் செலுத்துவதற்கு UPI உள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்துவது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளுக்கான வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு ரிசர்வ் வங்கி ஆப்பிள் நிறுவனத்தை கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் HDFC வங்கியுடன் ஒருங்கிணைந்து கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது. இரு தரப்பு பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளன எனவும், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரியவந்துள்ளது.







