திருப்பூரில் உள்ள பனியன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி எதிரிலுள்ள காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அப்பகுதியில், நெருக்கமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பனியன் விற்பனை கடைகள் உள்ளன.
இந்நிலையில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ 50 கடைகளுக்கு மேல் பரவியது. தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க தொழிலாளர்கள் முயன்றனர். ஆனால், வேகமாகப் பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குத் திருப்பூர் வடக்கு, தெற்கு என இரண்டு தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் ஆய்வு செய்தார். நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.







