செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை உயர்நீதிமன்ற வழக்கை நிலுவையில் வைக்க வேண்டும் என வாதிட்டார்.
இதனை கேட்ட நீதிபதிகள், இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளதால், இந்த விஷயத்தில் தாங்கள் இனி எதையும் கூறப்போவதில்லை என தெரிவித்தனர். மேலும் அமலாக்கத்துறை காவல் குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் எனக்கூறி, வழக்கை இரு நீதிபதிகளும் முடித்து வைத்தனர்.
இதனை தொடர்ந்து, செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீடு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. இதனிடையே, பணியாளர் சேர்க்கைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பிரதான மனுதாரரான பாலாஜி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொகுசு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இது சட்ட மீறல் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில் பாலாஜி வழக்கை 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.







