அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமியிடம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் ஜீலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்த போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதிஷ்குமார், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்








