எண்ணிக்கையில் மட்டுமல்ல, உயர்கல்வி தரத்திலும் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 11 இடங்களைப் பிடித்த சென்னை IIT, அம்ரிதா விஸ்வ வித்யாபீடம், கோவை, வேலூர் VIT, திருச்சி NIT, வேலூர் CMC, மாநிலக் கல்லூரி, சென்னை, லயோலா கல்லூரி, சென்னை, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை, சவீதா மருத்துவக் கல்லூரி & தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை, SRM அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை, JSS பார்மசி கல்லூரி, உதகமண்டலம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கௌரவித்தார்.
அதைத்தொடர்ந்து, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய நிகழ்ச்சி இது. மத்திய அரசின் சர்வே அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 53% ஆக இருக்கிறது. எண்ணிக்கையில் மட்டுமல்ல உயர்கல்வியின் தரத்திலும் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. 1,000 இடங்களில் 163 உயர்கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவையாகும். இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி., வந்திருப்பதில் மகிழ்ச்சி.
இந்தியாவிலேயே உயர்கல்வி தரத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டுக்குப் பின்னால் தான் டெல்லி இருக்கிறது. தமிழ்நாட்டின் தரத்தை மேலும் உயர்த்தவே ஆளுநர் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். 42,000 கோடியை கல்விக்காக மட்டுமே ஒதுக்கியவர் முதலமைச்சர் ஸ்டாலின். பெண் கல்வியை மேம்படுத்த மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வெகுவிரைவில் தமிழில் நன்றாக பேசுவேன் என்று சொல்லியிருக்கிறார் ஆளுநர். இதிலிருந்தே தமிழ் மீதான ஆளுநரின் ஆர்வம் தெரிகிறது.
எல்லாரும் வளர வேண்டும். எல்லாருக்கும் கல்வி போய் சேர வேண்டும். சிறப்பான கல்வியாக அது இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தரவரிசையில் முதல் 11 இடங்களைப் பிடித்த உயர்கல்வி நிறுவனங்களைப் பார்த்து பிற உயர்கல்வி நிறுவனங்களும் தரத்தில் தங்களை முன்னேற்றிக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அரசும், தனியாரும் போட்டி போட்டுக்கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
-ம.பவித்ரா








