முக்கியச் செய்திகள் தமிழகம்

மாட்டு வண்டி…கார்…அண்ணா…ஆதரவாளர்களுக்கு ஓபிஎஸ் சொன்ன குட்டிக்கதை

எதிரணியினர் அநாகரீகமாக பேசினாலும் தமது ஆதரவாளர்கள் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக குட்டிக் கதை ஒன்றையும் அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார். 

அதிமுகவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியிலிருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நீக்கினார். அதே நேரம் எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைகளை சட்டவிரோதம் என நிராகரித்துள்ள ஓபிஎஸ், தற்போதும் தாம்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதிமுகவிற்கு சொந்தம் கொண்டாடுவது தொடர்பாக, ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினரிடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை பிறர் போற்றும் வகையில் நாகரீகமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொள்வதாகக் கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக மறைந்த முதலமைச்சர் அண்ணா வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றையும் ஓபிஎஸ் தமது அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

”பேரறிஞர் அண்ணா, ஒரு முறை காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, அதில் பேசிய பேச்சாளர் அண்ணாவை வாய்க்குவந்தபடி வசைபாடிக் கொண்டிருந்தார். அப்போது வண்டியை ஓரமாக நிறுத்தி அந்த பேச்சாளரின் முழு பேச்சையும் அண்ணா கேட்டார்.

பின்னர் பயணத்தை தொடர்ந்தபோது காருக்குள் இருந்த நண்பர்களில் ஒருவர் அண்ணாவிடம், “ஏன் அண்ணா அவர் உங்களை கடுமையாக திட்டினார்” எனக் கேட்க, அண்ணா ஏதும் பதில் அளிக்காமல் மவுனம் காத்தார். சிறிது தூரம் சென்ற பிறகு ஒரு மாட்டு வண்டியை அந்த கார் முந்த வேண்டியிருந்தது. ஓரமாக காரை செலுத்தி மாட்டு வண்டியை முந்தினார்கள். அப்போது மாட்டு வண்டியை ஓட்டியவர் அண்ணா வந்த காரின் ஓட்டுநரை பார்த்து வசைபாடினார்.

அப்போது காருக்குள் இருந்த நண்பர்களிடம் அண்ணா, ”பார்த்தீர்களா கார் வேகமாக போகிறது. ஆனால் காரின் வேகத்திற்கு மாட்டுவண்டியால் வர முடியவில்லை. அதுதான் கோபம், அதனால் நம்மை திட்டுகிறார்.   அவருக்கு சமமாக நாமும் வசைபடாமல், நம் வேகத்தை அதிகரித்து, போக வேண்டிய இடத்தை அடைய வேண்டும். அந்த மாட்டுவண்டி காரரின் நிலையில்தான் அந்த பேச்சாளரும் இருக்கிறார். நம் வளர்ச்சி பொறுக்காமல் சிலர் திட்டுவார்கள், நாம் அதை தாங்கிக் கொண்டு வளர்ச்சி வேகத்தை அதிகரிக்க வேண்டும். பிறர் பேசும் திட்டுக்களை உரமாக்கிக்கொண்டு வளர வேண்டும் என்று அண்ணா கூறினார்.”

இவ்வாறு அண்ணாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை உதாரணமாக தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஓபிஎஸ், மக்களுடைய மற்றும் தொண்டர்களுடைய கோபத்திற்கு ஆளாகியுள்ளவர்கள்தான் தங்களை அநாகரீகமாக திட்டுவதாகக் கூறியுள்ளார். தங்களுடைய வளர்ச்சியையும், மக்களிடையே உள்ள ஆதரவையும் பொருத்துக்கொள்ள முடியாமல், ஏற்பட்ட கோபத்தில்தான், நாகரீகமற்ற, பண்பாடற்ற, வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதாகவும் ஓபிஎஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசியல் ரீதியாக யாராவது  தாக்கி பேசினாலும்,  நயத்தகு நாகரீகம்மிக்கவர்களாக அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பதிலுக்கு பதில் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சவுக்குத் தடை

Mohan Dass

தற்காலிக ஆசிரியர் தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி

Web Editor

“என்னை விலைக்கு வாங்க நினைத்தார்கள்” – பரப்புரையில் கமல் பேச்சு

G SaravanaKumar