இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் மரபணு ஒன்றுதான் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் சிறுபான்மையினர் பிரிவான முஸ்லீம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நேற்று நடைபெற்றது. அதில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் உதவியாளராக இருந்த கவாஜா இப்திகார் அகமது எழுதிய தி மீட்டிங் ஆஃப் மைண்ட்ஸ் புத்தகம் வெளியிடப்பட்டது.
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், எந்த ஒரு முஸ்லீமும் இங்கு வாழக்கூடாது என்று ஒரு இந்து சொன்னால், அவர்கள் இந்துவே அல்ல என்று சாடினார். தொடர்ந்து, “பசு என்பது புனித விலங்குதான். ஆனால், மற்றவர்களை கொல்பவர்கள் கூட இந்துத்துவாவிற்கு எதிரானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எந்த பாகுபாடும் இல்லாமல் இவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும், “இந்துவும், முஸ்லீமும் வேறுபட்டவர்கள் அல்ல. 40,000 ஆண்டுகளாக ஒரே மூதாதையரின் வழிவந்த சந்ததியினர் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. மதங்களைக் கடந்து அனைத்து இந்தியர்களின் மரபணுவும் ஒன்றுதான். நான் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இங்கு இந்துக்கள் அல்லது முஸ்லீம்களின் ஆதிக்கம் இருக்கக் கூடாது. இந்தியர்களின் ஆதிக்கம் மட்டுமே இருக்க வேண்டும்” என்று உரையாற்றினார்.







