சாதியற்ற சமுதாயம் குறித்து வலியுறுத்தும் திரைப்படங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளன. ஆனால் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவம் பேசிய திரைப்படங்களும் உண்டு.அதில் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படமும் ஒன்று. அடிமை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற நிலையை அகற்றும் திரைப்படங்கள் தந்த இயக்குனர்களில் ஒருவர் பி.ஆர். பந்தலு.
நாடு விடுதலை அடைந்த பின்பு சாதியற்ற நிலையை ஏற்படுத்த சமத்துவ கருத்துகள் உள்ளடங்கிய உரையாடல்களுடன் சில படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்றன. அப்படி ஒரு திரைப்படம் கர்ணன். குலத்தால் தாழ்ந்தவன் என்பதாலும் துரியோதனன் கூட்டத்தில் இருந்ததாலும் வில்லன் என கருதப்பட்ட கர்ணன், தனது தயாள குணத்தாலும்,நட்பை பேணியதாலும் நல்லவனாக அறியப்பட்டான். புறம் தள்ளப்பட்டவர்களின் அடையாளமாக மாறிய கர்ணனின் மனவலியை அச்சுப் பிறழாமல் தந்தார் இயக்குனர் பந்துலு.
திறமை இருந்தும் சபையில் அவமானப்படுத்தப்பட்டான் கர்ணன். குலத்தால் தாழ்ந்தவன் கல்வி கற்க கூடாது என அடித்து துரத்தும் ஆதிக்க சாதிக்கு எதிராக போரிடும் சிறுவன் இடம்பெற்ற காட்சியும் உரையாடல்களும் காலத்தால் அழியாதது. பிறப்பறியாதவன், தாழ்ந்தவன் உயர்ந்தவனோடு கல்வி கற்பது பாவம் என கூறி விரட்டி விட்டதாக கர்ணன் படத்தில் சிறுவன் பேசும் காட்சி சாதி வெறிக்கு எதிரான சாட்டை அடியாக அமைந்தது.
பிறப்பின் அடிப்படையில் ஒருவனை புறந்தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தே கர்ணன் திரைப்படம் நமக்கு தந்த பாடம்.
விடுதலை பெறுவதற்கு வீரம் மட்டும் போதாது விவேகமும் தேவை என குறிப்பிட்ட படம் எம்ஜிஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன். சமூகத்தின் அவலங்களை தட்டிக் கேட்க ஒரு தலைவன் வேண்டும் அவன் வீரம் மட்டுமன்றி விவேகம் நிறைந்தவனாக இருக்க வேண்டும் என படைக்கப்பட்ட ஒரு பாத்திரம் தான் ஆயிரத்தில் ஒருவன். அதில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பேசியிருப்பார் இயக்குனர் பந்தலு.
சாதியம் வேரறுக்கப்படும்வரை ‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ எனக்கூறிய மகாகவி பாரதியின் வரிகள், திரைப்படங்களாக வெளிவரத்தானே செய்யும்.










