மேட்டுப்பாளையம் அருகே ஒற்றை கை மற்றும் காலால் இயங்கும் கைத்தறியை வடிவமைத்த நெசவாளருக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் விருது வழங்கி கெளரவித்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை கைத்தறி பட்டு மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த தொழிற்சாலையை நம்பி ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இந்த பாரம்பரிய கைத்தறியில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அளித்து அதனை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர் சிறுமுகை சேர்ந்த நெசவாளரான காரப்பன்.
இவர் கடந்த 15 ஆண்டுகளாக முயற்சி செய்து மாற்று திறனாளிகளும் கைத்தறி தொழிலில் ஈடுபடும் வகையில் ஒரு கை மற்றும் ஒரு காலால் செயல்படும் வகையில் கைத்தறி ஒன்றிணை வடிவமைத்து அசத்தியுள்ளார்.
இதனையடுத்து இது குறித்து தகவல் அறிந்த மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை மூலம் பல கட்ட சோதனைகளை நடத்தி தற்போது அதனை அங்கீகரித்துள்ளது.
மேலும் இந்த கண்டுபிடிப்பை அண்மையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைப்பெற்ற அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சியில் இடம் பெற்ற நிலையில் அதனை அங்கீகரித்து தற்போது விருது வழங்கி அந்த நெசவாளர் கெளரவிக்கபட்டுள்ளார்.
விவசாயம், டெக்ஸ்டைல்ஸ்,கைவினை என பல துறைகளில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கண்காட்சியில் சிறுமுகை நெசவாளர் காரப்பன் கண்டுபிடித்த கைத்தறி இடம் பெற்றதுடன் அவருக்கு சிறந்த கைத்தறி வடிவமைததற்காக விருது வழங்கபட்டுள்ளது.
இந்த விருது நெசவாளர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என கூறியுள்ள காரப்பன், நெசவு தொழில் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் இந்த விருதுகள் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்ததாக கூறும் அவர் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ள நெசவு தொழிலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
— சே. அறிவுச்செல்வன்.







