தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆண்டிப்பட்டி கணவா காத்து” பாடல் யூடியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு வெளியான தர்மதுரை திரைப்படமானது சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, தமன்னா ஆகியோர் நடித்திருந்தனர். ராதிகா சரத்குமார் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 2016 ஆம் ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த நான்காவது திரைப்படம் ஆகும்.
மிகவும் இயல்பான கதைக்களம் கொண்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முதன்முறையாக கவிஞர் வைரமுத்து மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்தின் மூலம் இணைந்து பணியாற்றினர்.
படத்தில் வரும் மக்கா கலங்குதப்பா, எந்த பக்கம் காணும் போது, போய் வாடா, பாடல்கள் ரசிகர்களை முனுமுனுக்க வைத்தது. எந்த பக்கம் காணும் போது பாடலிற்காக கவிஞர் வைரமுத்து தேசிய விருது பெற்றார்.
இதனோடு ஆண்டிபட்டி கணவா காத்து பாடலும் பெரிதும் பேசப்பட்டது. வைரமுத்துவிற்கே உரித்தான ஒன்று தென் மாவட்டங்களின் வாசனையை தூண்டும் வகையில் எழுதுவது என்பது. இதனை அந்த பாடலில் நம்மால் நன்கு உணர முடியும்.
தற்போது “ ஆண்டிபட்டி கணவா காத்து” பாடல் 10 கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








