ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் – முதல் மரண தண்டனையை நிறைவேற்றியது ஈரான்

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான தனது முதல் மரண தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில், கடந்த செப்டம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் இளம்பெண் ஹிஜாப்புக்கு எதிராக…

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான தனது முதல் மரண தண்டனையை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில், கடந்த செப்டம்பர் மாதம் மஹ்சா அமினி என்னும் இளம்பெண் ஹிஜாப்புக்கு எதிராக கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை அந்நாட்டு போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்ற நிலையில், மஹ்சா அமினி திடீரென உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், போலீசார் தாக்கியதால் தான் அமினி உயிரிழந்தாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த ஈரானையும் உலுக்கியது. இதனைக் கண்டித்து அந்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. இந்த போராட்டங்களின்போது, மொஹ்சென் ஷெகாரி என்ற இளைஞர், துணை ராணுவப் படையினர் ஒருவரை அரிவாளால் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, “செப்டம்பர் 25ஆம் தேதி, தெஹ்ரானில், காவலர்களில் ஒருவரை அரிவாளால் காயப்படுத்திய கலகக்காரர் மொஹ்சென் ஷெகாரி, இன்று காலை தூக்கிலிடப்பட்டார்” என்று நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான மிசான் ஆன்லைன் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ஈரான் அரசு, ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிரான தனது முதல் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சர்வதேச அளவிலான மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.