கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது.
கோவை குனியமுத்தூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று வழக்குப்பதிவு செய்தது. அவர், அமைச்சராக இருந்தபோது, பல்வேறு ஒப்பந்தங்களில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு சோதனையை அறிந்த கோவை மாவட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு காலை முதல் குவிந்தனர். கலைந்து செல்லுமாறு தொண்டர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, வேலுமணி வீட்டில் காலை முதல் 12 மணி நேரமாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. இந்த சோதனை முடிவில் ஒரேயொரு லாக்கர் கீயை மட்டுமே எடுத்து சென்றதாக வேலுமணி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேலுமணி அமைச்சராக இருந்தபோது, ஒப்பந்தம் எடுத்திருந்த வடவள்ளியைச் சேர்ந்த பொறியாளர் சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மதுக்கரையில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் உறவினரும், அதிமுக பிரமுகருமான சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ஆனால், இந்த சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சென்னை எம்.ஆர்.சி. நகர் சத்யதேவ் அவென்யூவில் உள்ள அவரது இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. வீட்டில் இருந்த வேலுமணியின் சகோதரர் அன்பரசனிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.
சென்னை எம்.எல்.ஏ. விடுதியிலும் சோதனை நடைபெற்று வரும் நிலையில், வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாணை நடத்தினர். இதையறிந்த முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், பெஞ்சமின் உள்ளிட்டோர் சட்டமன்ற விடுதிக்குள் நுழைந்தனர். அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர்களும் நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு நிலவியது.