செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதோடு புதிய முயற்சியாக, காகிதமில்லாமல், இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில், தமிழ்நாடு சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வகையில் விதிகளை திருத்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை முன்னவர் துரைமுருகன், காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், பாமக சார்பில் கோ.க. மணி, இந்திய கம்யூனிஸட் சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே சமயம் அலுவல் ஆய்வுக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது. அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெறுவதால் அவர் உட்பட யாரும் அக்கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.








