ரஜினிகாந்த நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளியாகி மக்களை ஓடிடி பக்கம் இழுத்து சென்றது. தொற்று பரவல் குறையத்தொடங்கியதை அடுத்து முதலில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து தொற்று பரவல் கட்டுக்குள் வரத்தொடங்கியதையடுத்து நவம்பர் மாதம் முதல் 100% இருக்கைகளுடன் தியேட்டர் இயங்க அரசு அனுமதி அளித்தது. இதனால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் 100% பார்வையாளர்களுடன் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமரசனம் பெற்றது. படம் சீரியல் பார்ப்பது போன்று இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 21 நாட்களுக்குள் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.







