பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த முறை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் செயல்பாடுகள் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கட்டட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்க சோதனை அடிப்படையில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். அதில் எந்தவிதமான சட்ட மீறல்களும் இல்லை என்றார்.
DTCP யில் மட்டும் 32% பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், CMDA வில் மட்டும் 37 சதவீதம் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் கூறிய அவர், கடுமையான பணி சூழலில் அதிக பணிச்சுமையில் அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். கோவையில் நில மாற்றம் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் 2019 ஆம் ஆண்டு சிவ மாணிக்கம் என்பவர் அனுமதி கோரி இருப்பதாகவும், அதற்கான அனுமதி 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். எனவே எட்டு நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய் எனவும் அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்தார்.

ஜீ ஸ்கொயர் நிறுவனத்திற்கு முழுக்க முழுக்க அனுமதி வழங்கியதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறு என்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் முறைப்படி சட்டப்படி அனுமதி வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஜீஸ்கொயர் நிறுவனத்திடமிருந்து சில விண்ணப்பங்கள் வந்திருப்பதாக கூறிய அமைச்சர், அவை மாநகராட்சிகளுக்கு எல்லைக்கு உட்பட்டு வந்ததாகவும் அவற்றிற்கும் சட்டப்படி எந்த வித விதிமுறைகளை மீறாமல் அனுமதி வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அண்ணாமலை பேசுவதற்கு முன்னர் அனைத்தையும் தெரிந்துகொண்டு பேச வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அடுத்த முறை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்தால் அவர் மீது வழக்கு தொடரப்படும் எனவும் அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தார்..
– இரா.நம்பிராஜன்







