தமிழக பாஜக தலைவராக இன்று சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் பொறுப்பேற்றார் அண்ணாமலை.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே மாநில துணைத் தலைவராக பதவி உயர்வுப்பெற்றார். 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாஜக பதவி காலியானது. இந்நிலையில் இந்த பதவில் பல்வேறு மூத்த தலைவர்களுள் ஒருவர் நியமிக்கப்படுவார் என பாஜக தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் கட்சியில் இணைந்து ஓராண்டு கூட நிறைவேறாத அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தவிட்டார். இந்த அறிவிப்பு இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள, கமலாயத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இல. கணேசன், சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.








