தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
ஜம்முக காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதலின்போது நாட்டிற்காக உயிர்நீத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மதுரை விமான நிலையத்தில் நடைபெற்றது.
லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தபோது, அவர் கார்மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுவொரு கசப்பான நிகழ்வு என்று அண்ணாமலையும் தெரிவித்திருந்தார். காலணியை வீசியவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், அவர் டுவிட்டரில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்து அண்ணாமலை பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவுகளில் அவர் கூறியிருப்பதாவது:
முன்னோர்களின் முதலெழுத்துக்களுடன் மட்டுமே வாழும் நீங்களும் உங்கள் கூட்டாளிகளும், பெருமையுடன் விவசாயம் செய்யும் ஒரு விவசாயியின் மகனை (அண்ணாமலை) ஒரு நபராக ஏற்றுக்கொள்ள முடியாது.
பணக்காரக் குடும்பத்தில் பிறந்ததைத் தவிர இந்த வாழ்க்கையில் பயனுள்ள எதையாவது நீங்கள் செய்திருக்கிறீர்களா? நீங்கள் அரசியலுக்கும் எங்கள் மாநிலத்துக்கும் சாபக்கேடு!
https://twitter.com/annamalai_k/status/1564957345285025792
எங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரிய விமானங்களில் பயணம் செய்யாதவர்கள் நாங்கள்; வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றியதில்லை. முக்கியமாக, நிலையான சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
https://twitter.com/annamalai_k/status/1564957350838280193
இறுதியாக, என் காலணிகளுக்கு போதுமான தகுதி உங்களிடம் இல்லை. அதுபோன்ற ஒன்றைத் திட்டமிட உங்கள் நிலைக்கு நான் ஒருபோதும் இறங்க மாட்டேன். கவலைப்பட வேண்டாம் என்று அந்தப் பதிவுகளில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.








