அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக பாஜக – விசிக இடையே மோதல் எழுந்த நிலையில், அம்பேத்கருக்கு மாலை அணிவிக்க பாஜகவுக்கு தகுதியில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘அம்பேத்கரின் சித்தாந்த வாரிசாக பாஜக விளங்கி வருவதை எடுத்துரைக்க நான் தயார். இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள்’ என்று திருமாவளவனுக்கு சவால் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், அம்பேத்கர் வழியில் மோடி செல்கிறார் என்பதை விவாதிக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அரசியலில் அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர் என கூறினார். அவரோடு விவாதிக்க அவரைப்போல ஒரு சப் ஜூனியரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அனுப்பி வைக்கிறேன் என்றும் அவர் நகைப்புடன் பதிலளித்தார்.
மேலும், இயக்குனர் பாக்யராஜின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது எனவும், அவர் எதையும் நிதானமாக பேசக் கூடியவர், சீர் தூக்கி பேசக்கூடியவர் அவரை யார் இப்படி பேச வைத்தார்கள் என்று தெரியவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.







