கடத்தப்படும் வனவிலங்குகளின் தந்தம், தோல் பொருள்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யக்கோரிய வழக்கில், தமிழக வனவிலங்கு முதன்மை தலைமை பாதுகாவலர் பதிலளிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கடத்தல்காரர்களிடம் இருந்து வனவிலங்குகளின் தந்தம், தோல், பற்கள் உள்ளிட்டவைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்படும் கடத்தல் பொருட்களுக்கு QR அடையாள எண் கொடுத்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதனை நேரடியாக ஆய்வு செய்ய வலியுறுத்தி மதுரையைச் சேர்ந்த மணிபாரதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமலதா அமர்வு, வனவிலங்கு சம்பந்தமான பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து எடுக்கப்பட்ட நடவடிகைகள் பற்றி மத்திய, மாநில வனத்துறை செயலர் ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனக் கூறினார்.
மேலும், தமிழக வனவிலங்கு முதன்மை தலைமை பாதுகாவலர் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.







