ஆண்டிபட்டி – தேனி ரயில் அகல ரயில் பாதைக்கான சோதனை ஓட்டம் நாளை நடைபெறுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் ஏற்கனவே மதுரையிலிருந்து ஆண்டிபட்டி வரை பணிகள் நிறைவு பெற்று பெங்களூர் தென் சரக முதன்மை பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நிறைவு பெற்றுவிட்டது. தற்போது ஆண்டிப்பட்டி தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.
இந்தப் பகுதியில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் தலைமையில் விரைவில் ஆய்வு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக புதன்கிழமை(ஆகஸ்ட் 4) காலை 11 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை ஆண்டிபட்டி தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதையில் 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது.
எனவே அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும்போது ரயில் பாதையை கடக்கவோ, அருகில் செல்லவோ வேண்டாமென எச்சரிக்கப்படுகிறார்கள் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.








