மெளத் ஆர்கன் வாசித்து பிரதமர் மோடியை வியக்க வைத்த யானை!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு கோயில் யானை ஆண்டாள் மெளத் ஆர்கன் வாசித்து காட்டியது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோயில் சிலை…

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு கோயில் யானை ஆண்டாள் மெளத் ஆர்கன் வாசித்து காட்டியது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற இருக்கிறது.  இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு,  ஒவ்வொரு கோயில்களுக்கும் சென்று சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்.  அந்தவகையில் இன்று 108 வைணவ திருத்தலங்களில் முதன்மை தலமாக விளங்கக்கூடிய திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம்  செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சரியாக 11.20 மணிக்கு ஆலயத்திற்குள் சென்றார்.  ஒவ்வொரு சன்னதியாக சென்று தரிசனம் செய்த நிலையில் புகழ் பெற்ற கம்பராமாயணம் மண்டபத்திற்கு சென்ற பிரதமர் கம்பராமாயணத்தை பாராயணம் செய்ய அதனை அமர்ந்து கேட்டார்.  அதன் பின்னர் தாயார் சன்னதியில் நவராத்திரி கொலு மண்டபத்தில் அஷ்டலட்சுமி விளக்கேற்றி வழிபாடு செய்தார்.

பின் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள்,  அருகில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆசி பெற்றார்.  அப்போது யானைப் பாகன்,  ஆண்டாள் யானையிடம் மெளத் ஆர்கன் கொடுத்த போது அதனை மோடிக்கு வாசித்துக் காட்டியது.  மோடி மெய்மறந்து ஆண்டாள் யானையின் இசையை ரசித்துக் கேட்டார்.  அதன் தும்பிக்கையை தடவிக்கொடுத்தபடி மோடி தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து,  பிரதமர் நரேந்திர மோடி மதுரை வழியாக ராமேஸ்வரம் சென்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.