தொடக்க பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை அடுத்து மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12ம் வகுப்புகள் அரசு வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிரியர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முழுவதும் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அர்ப்பணிப்போடு செயல்பட்டு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறினார். தொடக்கப்பள்ளியை திறப்பது மிக மிக அவசியம். வரும் 8ஆம் தேதிக்கு பிறகு தொடக்க பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.
தொடர்ந்துபேசிய அவர், ஏதாவது ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து மாணவர்களிடம் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகளிடம் கூறினோம். அப்படி செய்ததில் நாமக்கல் மாவட்டத்தில் மூன்று மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது போன்று என்ன என்ன பிரச்சனைகள் வரும் 8 நாட்களில் வருகிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். நிச்சயம் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.







