திண்டுக்கல் அருகே உள்ள உலகம்பட்டியில் 100 ஆண்டுகள் பழமையான அந்தோனியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள உலகம்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை மற்றும் அந்தோனியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஊர் விழாக் குழுவினர் முடிவு செய்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்காக நீதிமன்ற வழிகாட்டுதல் படி அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு நெறிமுறைகளை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்ததால், அதிகாரிகள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்தனர். அதன்படி இன்று தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியர் பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டதை தொடர்ந்து, மற்ற காளைகள் சீறிப்பாய்ந்து வந்தன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர்.
இப்போட்டியில் 500 காளைகள் 400 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திண்டுக்கல் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி முதல் சுற்று நிறைவு பெற்றுள்ள நிலையில் மாட்டின் உரிமையாளர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் இரண்டாம் சுற்று முடிவின் போது 03 மாடுபிடி வீரர்கள், 02 மாட்டு உரிமையாளர், 01 பார்வையாளர் என மொத்தம் 06 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் போட்டி நடைபெறும் இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ குழுவினரிடம் அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. இவர்களில் இரண்டு பேர் அதிக காயம் காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.