இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானதையடுத்து, ராணிக்கு இரங்கல் செலுத்த விரும்புவோர் சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கருத்துக்களை எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு இருந்த அவர், சமீபத்தில் பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ்சையும் சந்தித்தார். இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து அவரது உடல் நிலை திடீரென கவலைக்கிடமாக மாறியதையடுத்து, மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 96 வயதான ராணி எலிசபெத் மறைவு அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டார். அவரது முன்னிலையில், எலிசபெத் இறுதி சடங்குகள் நடபெறவுள்ளன. இந்நிலையில், ராணி எலிசபெத் மறைவுக்கு உலக நாட்டு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ராணி எலிசபெத் காலமானதற்கு சென்னையில் உள்ளோர் அஞ்சல் செலுத்த இங்கிலாந்து தூதரகம் வாய்ப்பு அளித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தில் நாளை மற்றும் 12-ம் தேதிகளில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இரங்கல் புத்தகம் வைக்கப்படும் என்றும், ராணிக்கு அஞ்சலி செலுத்த விரும்புவோர் அந்த புத்தகத்தில் இரங்கல் கருத்துகளை எழுதிகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








