சென்னை, கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
தொடா் மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்திருந்தது. மழை காரணமாகவும், மூகூா்த்த நாள்களின் தேவை அதிகரிப்பு காரணமாகவும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென உயா்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 60 வரை அதிகபட்சமாக விற்பனையானது. இந்நிலையில், இன்று தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்து சென்னை கோயம்போடு மொத்த காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 35க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாள்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. அதேநேரத்தில், மூகூா்த்த நாள்கள் நிறைந்த ஆவணி மாதத்தில் தக்காளியின் தேவை அதிகரித்தது. இதனால் கடந்த 10 நாள்களில் தக்காளி கிலோவுக்கு ரூ. 40 வீதம் விலை அதிகரித்தது. இந்நிலையில், இன்று மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்து, சென்னை கோயம்போடு மொத்த காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 35க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் சில்லறை விற்பனைக் கடைகளிலும் தக்காளி விற்பனை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சின்ன வெங்காயத்தின் விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், தற்போது வரத்து குறைந்ததன் எதிரொலியாக ரூ. 50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








