‘மெதுவா போ’ எனக் கூறியதற்காக அடித்துக் கொலை செய்யப்பட்ட முதியவர்! எங்கே நடந்தது?

இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் வேகமாக சென்ற இளைஞரிடம், ‘மெதுவா போப்பா’ என்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அல்வாலில் கடந்த மாதம் வாகனஓட்டி ஒருவரால்…

இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினருடன் வேகமாக சென்ற இளைஞரிடம், ‘மெதுவா போப்பா’ என்ற முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள அல்வாலில் கடந்த மாதம் வாகன
ஓட்டி ஒருவரால் தாக்கப்பட்ட முதியவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று உயிரிழந்தார். கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று அல்வால் பகுதி சீனிவாசா நகர் காலனியை சேர்ந்த 69 வயது முதியவர் ஆஞ்சநேயலு, அந்த பகுதியில் உள்ள பரபரப்பான சாலையை கடக்க முயன்றார்.

அப்போது தீபக் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன், அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தார். ஆஞ்சநேயலு மீது மோதுவது போல் தீபக் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நிலையில், ஆஞ்சநேயலு தீபக்கை பாத்து மெதுவா போப்பா என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த தீபக், மோட்டார் சைக்கிளை நிறுத்தி, கீழே இறங்கி முதியவர்
என்றும் பாராமல் ஆஞ்சநேயலுவை கடுமையாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இந்த சம்பவத்தில் ஆஞ்சநேயலு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.

அப்போது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த
பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதில் கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் தீபக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஆஞ்சநேயலு சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இதனையடுத்து தீபக் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, கொலை வழக்காக மாற்றிய போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மோட்டார் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த இளைஞரை பார்த்து, மெதுவா போப்பா என்று அறிவுரை கூறிய முதியவருக்கு ஏற்பட்ட நிலை தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.