“மாணவர்களை தாக்கியவர்கள் மீது FIR பதிய வேண்டும்” – டெல்லி காவல் நிலையத்தில் ராகுல் போராட்டம்!

மாணவர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு வழக்கில் FIR பதிவு செய்யாததால் டெல்லி காவல்த்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் ராகுல்காந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தின் போது மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாததைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி நாடாளுமன்ற தெருவில் உள்ள காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

காயமடைந்த மாணவர்களுடன் மூத்த காவல் அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட ராகுல் காந்தி, காவல்துறை பாரபட்சமாக நடப்பதாகக் குற்றம்சாட்டியதுடன் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் டெல்லி ஜெய்சிங் சாலையில் உள்ள டெல்லி காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்திற்கு ராகுல் காந்தி நேரில் சென்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகளால் தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மீது ஏன் இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை?” என மூத்த காவல் அதிகாரிகளிடம் அவர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

ஜந்தர் மந்தர் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான உயர்மட்டக் குழு உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தி வருவதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் ராகுல்காந்தி துணை ஆணையர் அலுவலகத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடரும் எனக் காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.