நீட் தேர்வு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிதான் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்தி வருகின்றது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். நடாளுமன்றக்கூட்டம் நடைபெற்று வரும் சூழலில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டும் வீசினர். இது பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரியில், “ஒவ்வொரு குழந்தைக்கும், மாணவருக்கும், பெண்ணுக்கும் மற்றும் ஆணுக்குமான செய்தி இது: அமைதியான சூழலில் கற்கவும், பாதுகாப்போடு வளரவும், உங்கள் கனவுகளை நனவாக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு.
உங்கள் நலனே ஒளிமயமான இந்தியாவின் அடித்தளமாகும். அன்பு, வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கை நிறைந்த சமூகங்களை உருவாக்க நாம் ஒன்றிணைவோம். பேச்சுவார்த்தை மூலம், இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு சுமூகமான தீர்வை நாம் காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.





