2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்; உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன். கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80க்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 6 அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட் சிறப்பம்சங்கள்:
- பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி ஒதுக்கீடு.
- கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2,950; மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை.
- கரும்பு சாகுபடிக்கு உதவ ரூ.10 கோடி ஒதுக்கீடு.
- சர்க்கரை ஆலைகளில் ஆய்வகத்தின் நவீனமயமாக்கல் & தானியங்கி எடைகள் அமைக்க ரூ.4.5 கோடி நிதி. மின் இணைப்பு வழங்கப்பட்ட தாட்கோ பயனாளிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு நிதி உதவி ரூ.20 கோடி ஒதுக்கீடு
- தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி; தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி
- தேனீ வளர்ப்பு தொகுப்புகளுக்கு ரூ.10.25 கோடி; உழவர் சந்தைகளின் காய்கனிகளின் வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி; பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
- பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி
- முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகளுக்கு ரூ.65.34 கோடி நிதி; 145 சூரிய சக்தி உலர்த்திகளுக்கு ரூ.3 கோடி
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறு தானியங்கள், பயறு வகைகளை விற்பனை செய்ய அனுமதி.
- திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் ரூ.381 கோடியில் மூன்று மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காக்கள்.
- காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி.
- அயிரை, செல் கெண்டை மற்றும் கல்பாசு போன்ற உள்நாட்டு மீன் வளர்ப்பு மற்றும் பாதுகாப்புக்கு ரூ.5 கோடி நிதி; ஊரக வளர்ச்சித் துறை மூலம் ரூ.1245.65 கோடியில் பண்ணைக் குட்டைகள், தடுப்பணைகள் மற்றும் தூர்வாரும் பணிகள்.







