2022-23ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் நடைப்பெற்றுவருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், 2வது முறையாக தாக்கல் செய்து வருகிறார். விவசாயிகள் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்; உழவர் தொழிலே உலகில் உயர்ந்தது என உணர்த்தும் வகையில் பட்ஜெட்டை முன் வைப்பதில் பெருமைகொள்கிறேன். கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80க்கு அரசாணை வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 6 அறிவிப்புகள் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வேளாண் பட்ஜெட் சிறப்பம்சங்கள்:
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCO விற்கு ரூ.5,157.56 கோடி
- விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச்செல்லவும், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்த செல்லவும் கிராம ஊராட்சிகளில் ரூ.604.73 கோடி செலவில் 2,750 கி.மீ நீளத்தில் சாலைகள்.
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டத்தின் மூலம் 3 லட்சம் வேளாண் சார்ந்த வாழ்வாதாரப் பணிகளுக்கு ரூ.42.07 கோடி நிதி ஒதுக்கீடு
- வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை உருவாக்க ரூ.30.56 கோடி ஒதுக்கீடு.
- சிறு, குறு, நடுத்தர தொழில்கள் (MSME) மூலம் சிறிய விவசாயம் சார்ந்த தொழில்களை தொடங்க ரூ.1.5 கோடி வரை மூலதன மானியம்.
- வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராம வங்கிகள் மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ரூ.1,83,425 கோடி வேளாண் கடன் வழங்கப்படுவதை கண்காணிக்க நடவடிக்கை.
- முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டத்தில் 3,000 மானாவாரி நிலத் தொகுப்புகளில் 7.5 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள் பயன்பெறுவதற்கு ரூ.132 கோடி நிதி ஒதுக்கீடு.
- கைபேசி மூலம் இயக்கிடும் வகையில் தானியங்கி பம்பு செட்டு கட்டுப்படுத்தும் கருவிகள், 50% மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.5,000 மானியத்தில் வழங்கப்படும்.
- மிளகு, சாதிக்காய், கிராம்பு ஆகியவற்றிற்கான மரபணு வங்கி, நீலகிரி, கொடைக்கானல், கொல்லிமலை, குற்றாலம், ஏற்காடு, ஜவ்வாது மலைகளில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் துவக்கப்படும்.
- பனை சாகுபடியை ஊக்குவிக்க இந்த ஆண்டு 10 லட்சம் பனை விதைகள் வழங்கப்படும்.
- வேளாண்மை, அதுசார்ந்த பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, 2022-23ம் நிதியாண்டில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ஒருவருக்கு ரூ.1 லட்சம் வீதம் நிதி உதவி வழங்கப்படும்.







