அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கார்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் கூறுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானதாகும்.
சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய தவெக – காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் இன்று வரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
தற்போது, ‘தமிழக முதலமைச்சர், காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன்’ என்று சொன்ன பிறகு, ‘யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.
ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று தவெக – காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




