அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் தொடர்வதற்காக ஓபிஎஸ் உடன் கைகோர்த்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழா ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று, வைத்திலிங்கம், அவர்கள் இருவரின் வீடுகளுக்கே தேடித் சென்று நேரில் அழைப்பிதல் கொடுத்து, அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சில உடல்நலக்குறைவு பிரச்சனைகளால் சசிகலா இந்த திருமண விழாவில் கலந்துகொள்ளாத நிலையில், டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து திருமண நிகழ்ச்சியில், மேடை ஏறி வைத்திலிங்கத்தின் இளைய மகன் சண்முகப்பிரபுவிற்கு பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்திய டிடிவி தினகரன், பின்னர் அங்கிருந்தவர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது;
அம்மாவின் தொண்டர்களாக அம்மாவின் நிர்வாகிகளாக 30 ஆண்டுகளாக இந்த இயக்கத்தில் பணியாற்றியவர்கள் எல்லாம் இன்று ஒரு சிலரின் சுயநலத்தால், பண திமிரால், பிரிந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்குள் இருந்த வருத்தங்களையும் கஷ்டங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மீண்டும் தமிழ்நாட்டிலே அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டு வருவதற்காக நான் ஓபிஎஸ் உடன் கைகோர்த்து இருக்கிறேன். இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைத்திலிங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
காலத்தின் கட்டாயத்தால் நாங்கள் பிரிந்து இருக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டாலும், அரசியலை தாண்டி எங்களுக்குள் இருந்த அன்பும், நட்பும் என்றைக்கும் தொடர்ந்து இருக்கும் என்பது இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் தெரியும். சிலரின் பேராசையினால் தான் மிகுந்த வேதனையோடு பிரிந்து சென்று, அமமுகவை தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அம்மாவின் லட்சியங்களை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் தொடர வைக்க வேண்டும். அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்து செயல்பட தொடங்கியுள்ளது.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








