சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் வீடு திரும்பும் இளைஞர் தனது குடும்பத்தினரை சர்ப்ரைஸாக சந்திக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஒருவர் குடும்பத்திலிருந்து வெகு தொலைவில் வாழ்வது சவாலான அனுபவம் தான். படிப்பு, வேலை என அன்புரிக்குரியவர்களை பிரிந்து நீண்ட காலம் வாழ்வது சாதாரணமான விஷயம் அல்ல. பிரிவை சந்திக்கும் இரு தரப்பினருக்கும் அது மிகுந்த மன வலியை உருவாக்கும். தொலைபேசி, வீடியோ கால் என பல வசதிகள் வந்து விட்டாலும் உறவுகளை நேரடியாக சந்திப்பது என்பது எழுத்தில் விவரிக்க முடியாத இன்பத்தை தரும்.
ஆம்.. பிரிவின் வலிகளை உணர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினரை சந்தித்த வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தான் வருவதை யாருக்கும் தெரிவிக்காமல், வீடு திரும்புகிறார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் சிறுவன் (சகோதரர்) ஒருவன் இளைஞரை சந்திக்கிறார்.
மகிழச்சியில் சிறுவன் சத்தம் எழுப்ப முயல அவன் வாயை மூடி உள்ளே அழைத்து செல்கிறார் அந்த இளைஞர். பின்னர் அவர் சகோதரியை பார்க்கிறார். அவரும் சந்தோசத்தில் துள்ள அப்படியே சமையல் அறைக்கு செல்கிறார் இளைஞர். அங்கு அவரது தாயார் சமையல் செய்து கொண்டிருக்கிறார். திடீரென மகனை கண்டவுடன் காலை கட்டிபிடித்துக்கொண்டு கீழே விழுந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் அந்த அன்பு தாயார் . அன்சில் என்ற அந்த இளைஞர் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







