மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியில் செயல்பட உள்ளது. அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.
மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவர்களை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கடந்த மாதம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
நடப்பு ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கல்வி பயில 500க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்த நிலையில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது.
இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் செயல்படவுள்ள மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு என்று 4 நவீன வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்கள் தயாராக உள்ளது. முதல் கட்டமாக எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் வகுப்புகள் எடுக்க உள்ளனர். இம்மாதம் 16ம் தேதிக்குப் பின் நேரடி வகுப்புகள் தொடங்க வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது.







