விண்வெளி வீரர்களின் வரலாற்றில் முதன்மையான இடத்தைப் பெற்ற ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாள் இன்று.
விண்வெளி வீரர், ராணுவ விமானி, கல்வியாளர் என்று பல்வேறு முகங்களை கொண்டவர் நீல் ஆம்ஸ்ட்ராங். அமெரிக்காவில் ஓஹியோவின் வாபகோனெட்டா அருகேயுள்ள ஒரு கிராமத்தில், ஆகஸ்ட் 5, 1930-ல் பிறந்தார். சிறு வயதிலேயே விமானப் போக்குவரத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். 16-வது வயதில் ஆம்ஸ்ட்ராங் தனது மாணவர் பைலட் உரிமத்தைப் பெற்றார். அதுவே அவர் நிலவுக்கு செல்வதற்கான முதல் படியாக அமைந்தது.
1947-ம் ஆண்டில், ஆம்ஸ்டிராங் அமெரிக்க கடற்படை உதவித் தொகையில், பர்டூ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் பொறியியலில் தனது படிப்பைத் தொடங்கினார். 1949-ல் கொரியப் போரில் பணியாற்ற அழைக்கப்பட்டபோது, அவரது படிப்பு தடைபட்டது. அமெரிக்க கடற்படை விமானியாக ராணுவ மோதலின் போது 78 முறை போர் பயணங்களை மேற்கொண்டார் ஆம்ஸ்ட்ராங். அவர் 1952-ல் கடற்படை சேவையை விட்டுவிட்டு கல்லூரிக்குத் திரும்பிய பிறகு, ஏரோநாட்டிக்ஸ் தேசிய ஆலோசனைக் குழுவில் சேர்ந்தார், பின்னர் அது தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA) என்ற பெயர் மாற்றம் அடைந்தது. அங்கு சோதனை பைலட், பொறியாளர் என்று பல்வேறு துறைகளில் பணியாற்றினார். X-15 உட்பட பல அதிவேக விமானங்களை சோதித்தார், அவற்றில் X-15 ஒரு மணி நேரத்திற்கு 4,000 மைல் வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 28, 1956-ல் ஜேனட் ஷெரோன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 1957-ல் மகனும் 1959-ல் மகளும் பிறந்தனர். துரதிர்ஷ்டவசமாக, அவருடைய மகள் கேரன் ஜனவரி 1962-ல் மூளைக் கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு காலமானார்.
1969-ல் மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் பஸ் ஆல்ட்ரினுடன் சேர்ந்து, நாசாவின் முதல் மனிதனுக்கான நிலவு பயணத்தின் திட்டத்தில் இடம்பெற்றார். இந்த மூவரும் ஜூலை 16, 1969 அன்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் அந்த மிஷனின் தளபதியாக பணியாற்றினார். இரவு 10:56 மணிக்கு ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால் பதித்தார். அப்போது அவர், “இது மனிதனுக்கு ஒரு சிறிய படி, மனிதகுலத்திற்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். சுமார் இரண்டரை மணி நேரம், ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின், நிலவில் மாதிரிகளைச் சேகரித்து பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவர்கள் தங்களின் சொந்த கால்தடம் உள்ளிட்டவற்றை புகைப்படமும் எடுத்தனர்.
ஜூலை 24, 1969 அன்று திரும்பிய அப்பல்லோ-11 விண்கலம், பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுக்கு மேற்கே வந்து சேர்ந்தது. ஆம்ஸ்ட்ராங் தனது முயற்சிகளுக்காக பெருமைமிக்க சுதந்திரப் பதக்கம் மற்றும் காங்கிரஸின் விண்வெளிப் பதக்கம் உட்பட பல விருதுகளைப் பெற்றார். ஆம்ஸ்ட்ராங் நாசாவில் 1971-ம் ஆண்டு வரை, ஏரோநாட்டிக்ஸ் துறையின் இணை நிர்வாகியாக பணியாற்றினார். நாசாவில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றினார்.
உலகின் மிக பிரபலமான நபராக இருந்தாலும், ஆம்ஸ்ட்ராங் பொதுமக்களின் பார்வையில் இருந்து சற்று விலகியே இருந்தார். எனினும், 2006-ல் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு, ஒரு மணி நேர நேர்காணலை அவர் கொடுத்தது அப்போது பரபரப்பாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது.
1994-ல் ஆம்ஸ்ட்ராங்கும் அவரது முதல் மனைவியும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதையடுத்து, அவர் தனது கடைசி காலத்தை, ஓஹியோவில் தனது 2-வது மனைவி கரோலுடன் கழித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டதால், இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில், சில வாரங்களுக்குப் பிறகு 2012 ஆகஸ்ட் 25-ம் தேதி, ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார்.








