தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதமில்லா பட்ஜெட்

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு…

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதேபோல் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இவை இரண்டும் காகிதமில்லா பட்ஜெட்டாக கணினிமூலம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இ-பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டப்பேரவை செயலகம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் இருக்கையின் முன்பும் கணினி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை வாசிக்கும்போது, சட்டமன்ற உறுப்பினரின் முன்னால் வைக்கப்பட்டுள்ள கணினியின் மூலம் நிதிநிலை அறிக்கையை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவிருக்கும் கலைவாணர் அரங்கம்

இனிவரும் காலங்களில் சட்டமன்ற கூட்டத்தொடர் காகிதமில்லா கூட்டத்தொடராக இருக்கும் என்பதால் அதற்கானா ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். மேலும் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கை மற்றும் துறைரீதியான மானியக் கோரிக்கையின் போது ம் புத்தகமாக அச்சிட்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. இதை தவிர்ப்பதற்காகவும், காகிதங்களின் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கலாம் என்பதற்காகவும், காகிதமில்லா பட்ஜெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.