மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டும் என அவரது மனைவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி நடிகர் விவேக் நகர் பெயர் பலகை தயார் நிலையில் இருப்பதாகவும் ஜீன் 3-ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகரும், சமுதாயம் மீது அக்கறை கொண்டவருமான நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி காலமானார். உயிருடன் இருக்கும் போது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்ததோடு, இளைஞர்களையும் மரக்கன்றுகளை நட்டு வைப்பதற்கு அவர் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டார். மேலும் எந்த சர்ச்சையிலும் சிக்காத நடிகர் விவேக் பலருக்கு முன்னுதாரனமாக திகழ்ந்தார். பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது கருத்து நிறைந்த நகைச்சுவையால் ஈர்த்த மாமனிதனின் இறப்பு இன்றளவும் பலருக்கு வேதனையளிக்கிறது.
இந்நிலையில், விவேக் வசித்து வந்த பகுதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என விவேக்கின் குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவேக்கின் மனைவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். பின்னர் விவேக் பெயரை வைத்து கொள்ள தமிழ்நாடு அரசும் அரசாணை பிறப்பித்தது.
அதன்படி நடிகர் விவேக் வசித்து வந்த பகுதிக்கு நடிகர் விவேக் நகர் என பெயர் சூட்டுவதற்கான பெயர் பலகை தயார் செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜீன் 3-ம் தேதி நடிகர் விவேக் நகர் திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.







