கல்விக்காக கற்றல், கற்பித்தல், பயிற்சி அளித்து 100% தங்கள் கிராமம் கல்வியறிவில் முன்னேற்றம் அடைய முயற்சித்து வரும் இளைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள். மாணவர்களுக்கு இங்குள்ள அரசு ஊழியர்களே சிறப்புப் பயிற்சி அளிப்பதுடன், போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர்.
படி படி படி படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். வாழ்க்கையில் முன்னேறக் கல்வி மட்டுமே போதுமானது என்று ஒரு கிராமமே கல்விக்காக கற்றல், கற்பித்தல், பயிற்சி அளித்து தங்களது கிராமத்தை 100% கல்வியறிவில் முன்னேற்றம் அடைய முயற்சி செய்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் மாங்கோட்டை ஊராட்சியில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் வகையில் அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள அம்பேத்கர் நகரில் 250 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள். 2004-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்தக் கிராமத்தில் யாருமே அரசுப் பணிக்குச் செல்லாமல் இருந்த நிலையில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிருந்து அரசுப் பணிக்குச் செல்வோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, தற்போது அந்த எண்ணிக்கை 38 ஆக உள்ளது.
இந்நிலையில் ஒரு குக்கிராமத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் அரசு ஊழியர்களாகியிருப்பது அனைவரின் பாராட்டுக்குரியதாக உள்ளது. இவர்கள், தாங்கள் அரசுப் பணிக்குச் செல்வதோடு மட்டுமல்லாமல், தங்களது கிராமத்தில் உள்ள அடுத்தடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவி செய்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்தக் கிராமம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னோடி கிராமமாக தற்போது உருவெடுத்துள்ளது.
இதுகுறித்து அதே கிராமத்தைச் சேர்ந்தவரும், கந்தர்வக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியருமான சசிக்குமார் கூறுகையில், அம்பேத்கர் நகர் மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருந்தனர். கூலி வேலை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதுதான் இந்தக் கிராமத்தின் வாழ்வாதார நிலை. இதிலும் வெகு சிலரிடம் மட்டுமே விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு போட்டித் தேர்வுகள் மற்றும் நேரடி நியமனம் மூலமாக அரசுப் பணிக்கு ஒவ்வொருவராகச் செல்லத் தொடங்கினர். அந்த வகையில், தற்போது அம்பேத்கர் நகரில் ஆசிரியர்கள் 11 பேர், காவல் துறையில் 13 பேர், வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் உட்பட 3 பேர், மருத்துவர்கள் 2 பேர், கல்வித் துறையில் ஆசிரியரல்லாத பணியாளர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள் 2 பேர், போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநராக 4 பேர் மற்றும் வருவாய்த் துறையில் ஓட்டுநராக ஒருவர் என மொத்தம் 38 பேர் அரசு ஊழியர்களாக உள்ளனர்.
இவர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையாகப் படித்து முன்னேறியவர்கள். தற்போது அவர்கள் இந்தக் கிராமத்திலிருந்தே பணிக்குச் சென்று வருகின்றனர். இவர்களில் 6 பேர் மட்டும் போட்டித் தேர்வுகள் இல்லாமல் அரசுப் பணிகளுக்குச் சென்றுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் படிப்படியாக முன்னேறுவதைப் பார்த்து, மற்றவர்களுக்கும் அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டு, படிப்பின் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இங்குள்ள அரசு ஊழியர்களே சிறப்புப் பயிற்சி அளிப்பதுடன், போட்டித் தேர்வுகளுக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர். இங்கு, முன்பைவிட தற்போது உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், வருங்காலங்களில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.
ஒரே கிராமத்தில் 38 பேர் அரசுப் பணிக்குச் சென்றிருப்பதால், அந்தக் கிராமமும் முன்னேறுகிறது. இதைப் பார்த்து, மற்ற கிராமங்களைச் சேர்ந்தவர்களும் தங்களின் கிராமங்களைக் கல்வியால் பெருமைகொள்ளச் செய்ய வேண்டும் என எண்ணி மாற்றத்தை முன்னெடுத்துள்ளனர். அந்தவகையில், மாவட்டத்தில் முன்னோடி கிராமமாக அம்பேத்கர் நகர் உருவெடுத்துள்ளது என்றார். மேலும் கிராமத்தில் கல்வி பயின்று அரசுப் பணிக்குச் சென்ற நாங்கள் எங்களால் முடிந்த உதவிகளை எங்களின் அடுத்த தலைமுறைக்கு அவர்கள் படிப்பதற்குத் தேவையான உதவி செய்கின்றோம். அவர்கள் அவர்களுக்குக் கீழே உள்ள இளைஞர்களுக்குப் பாடம் எடுத்து வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகின்றனர்.
இப்படியே எங்கள் கிராமத்தில் முதல் தலைமுறை பட்டதாரியிலிருந்து அவர்கள் கீழே உள்ளவர்கள் அவர்கள் அவர்களுக்குக் கீழே உள்ளவர்கள் என்று சிறுவர்கள் வரை அனைவரையும் படிப்பதற்கு ஊக்குவித்து வருகின்றோம் .100% எங்கள் கிராமத்தைக் கல்வியறிவு பெற்ற கிராமமாக மாற்றுவதற்கு அனைவரும் முயற்சி செய்து வருகின்றோம் என அவர் கூறினார்.
ராஜ் குமார்