தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடம் உறுதியாக உள்ளது – அமைச்சர் எ.வ.வேலு

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மை நன்றாக உள்ளது என்றும், டெண்டரில் தான் தவறு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தேசிய…

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மை நன்றாக உள்ளது என்றும், டெண்டரில் தான் தவறு ஏற்பட்டுள்ளது என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்த பின் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
அமைச்சர் மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய எ.வ.வேலு, 2016 இல் தேசிய முதியோர் நல மருத்துவமனை 78 கோடி ரூபாய் செலவில் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது. 2018 இல் பயன்பாட்டுக்கு வந்தது.
இப்போது, இந்த கட்டிடம் சேதமடைந்து பூச்சுகள் கைவைத்தாலே உதிருகின்றன என
புகார்கள் வந்ததன் அடிப்படையில் ஆய்வு செய்ய வந்தோம்.

இதுகுறித்து, முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவரின் உத்தரவின்பேரில், ஐஐடி சந்தானம், கண்காணிப்பு பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அளித்த பரிந்துரையில், கட்டிடத்தின் உறுதித்தன்மை நன்றாக உள்ளது. 100% பயப்பட தேவையில்லை என்றார்கள். மதிப்பீட்டில் உள்ள அனைத்தும் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பூச்சு வேலையில் சரியாக பூசப்படவில்லை. வேதிப்பொருள் கலக்காமல் பூசிய காரணத்தாலும், முறையாக தண்ணீர் பீச்சியடிக்காத காரணத்தினாலும் கீழே பூச்சுகள் உதிர்ந்தது.

பெரியசாமி ஒப்பந்ததாரருக்கு கடிதம் அனுப்பினோம். முறையாக கட்டப்பட்டதுதான், வாய்ப்பு கொடுத்தால் சிதிலமடைந்த பகுதிகளை சரி செய்கிறோம் என்றனர். அரசுக்கு கூடுதல் பண சுமை ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினாலும், அவர்களே சரி செய்வதாக தெரிவித்ததாலும் ஒப்புக்கொண்டுள்ளோம். கான்பிளாஸ்டிக், மித்தோ பேண்ட் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். அது எஸ்டிமேட்டில் இதனை சேர்க்காமல் இருந்தது. இனி அதை சேர்த்து பூச்சு வேலை செய்ய சொல்லி இருக்கிறோம். திட்ட மதிப்பீட்டில் சேர்த்திருக்க வேண்டும். சேர்க்காமல் விடுபட்டுவிட்டது. இனி பொதுப்பணித்துறை கட்டிடங்கள் கட்டப்படும் போது எம் சாண்ட் சேர்க்கும்போது இந்த வேதிப்பொருளை சேர்க்க வேண்டும்.  இடையில் மணல் தட்டுப்பாடு இருந்தது. காவிரி, தாமிரபரணி ஆறுகளில் மட்டும் தான்
மணல் எடுக்க அனுமதி இருந்தது. எம் சாண்டை பயன்படுத்தலாமா என்று ஐ ஐ டி போன்ற பல்வேறு நிறுவனங்களில் கருத்து கேட்டு அரசாங்கம் ஒப்புதலுடன்
பயன்படுத்துகிறோம்.

மூன்று பரிந்துரைகள், எம் சாண்ட் பயன்படுத்தும் போது உறுதித் தன்மையுடன் இருப்பதற்காக வேதிப்பொருள் பயன்படுத்தி எம் சாண்ட் உடன் சேர்த்து பூச வேண்டும்.
ஈரத் தன்மை எப்போதும் இருப்பது போல் இல்லாமல் மழை நீர் கால்வாய் சுவரிலிருந்து
தள்ளி கட்ட வேண்டும். கட்டிடங்கள் கட்டப்பட்ட உடன் 200% தண்ணீர் தன்மையுடன் கட்டிடங்களை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.