தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான்… தமிழ் தாழ்ந்தால் தமிழன் வீழ்வான் – பாவேந்தர் பாரதிதாசன்

‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் பிறந்தநாள் இன்று. தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் அவர்.. தமிழுக்கும் அமுதென்று பேர்…

‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்ட பாரதிதாசன் பிறந்தநாள் இன்று. தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் அவர்..

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

 

தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்து சென்றவரே பாவேந்தர் பாரதிதாசன். தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும்.. தமிழ் மீது பற்று உள்ளவர்களுக்கு மத்தியில் தமிழுக்காக தன்னை மாற்றியவர் பாரதிதாசன். தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். அதன் பலனாக சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது 16-வது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது வைத்திருந்த பற்றினையும்,  தமிழ்ப் புலமையையும் விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்த அவர், 3  ஆண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, 2  ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார்.

 

தூங்கும் புலியைப் பறை

கொண்டெழுப்பினோம்..

தூய தமிழை தமிழ்

கொண்டெழுப்பினோம்..

தீங்குற பகைவரை

இவணின்று நீக்குவோம்..

செந்தழிழ் உணர்ச்சி

வேல் கொண்டு தாக்குவோம்..

 

என்று பாடல்களினாலே தமிழை தனது பாணியில் தலை நிமிர்த்தினார்.

 

பாரதிதாசன், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டான 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். பின்னர் சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர். எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் அவைகளும் பேசப்பட்டன. ஆனால் “தமிழே என்னுயிர் என்பேன்” என்பது தான் அவரின் பிரதானமாக இருந்தது.

 

பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழ் இயக்கம், இசையமுது, குயில், தமிழச்சியின் கத்தி, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திசூடி, பெண்கள் விடுதலை,  பிசிராந்தையார், மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது, முல்லைக் காடு, கலை மன்றம், விடுதலை வேட்கை என பல படைப்புகளை மக்களிடத்தில் கொண்டு சென்றார்.

 

பாவேந்தருக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். பாவேந்தர் பாரதிதாசன் நினைவாக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது. மேலும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சியில் ​​நிறுவப்பட்டது.

 

தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே..

தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடாதே..

 

என்று தமிழ் மொழிக்காவே தனது சிந்தனைகளையும், கொள்கைகளையும் எழுத்து மூலம் கொண்டு சேர்த்தார் பாவேந்தர்.

தமிழ் உயர்ந்தால் தமிழன் உயர்வான்

தமிழ் தாழ்ந்தால் தமிழன் வீழ்வான்..

என்று இறுதி வரை தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்ததோடு, எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் 1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 

தமிழுக்கும் தமிழர்களுக்கும் கடும்பணியாற்றிய பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளான இன்று அவரை போற்றுவோம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.