அமர்நாத் வெள்ளம் – பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் அருகே நிகழ்ந்த திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை…

ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில் அருகே நிகழ்ந்த திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க கடந்த ஜூன் 30ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகஸ்ட் 11ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அமர்நாத் குகைக் கோயில் அருகே நேற்று மாலை 4 மணி அளவில் திடீர் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் சிக்கிக்கொண்டனர்.

அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணும், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் அதுல் கார்வால் தெரிவித்துள்ளார். மேலும், 40 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கியவர்களில் 29 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், அவர்களில் 9 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் விமானப் படை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை முகாமுக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேபோல், உயிரிழந்தவர்களின் உடல்களும் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன. உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி இங்கிருந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகளில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ஒரு ஹெலிகாப்டர் சண்டிகரில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விமானப் படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, குகைக் கோயில் அருகே சிக்கிக் கொண்ட சுமார் 15 ஆயிரம் பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்தோ திபெத் எல்லை போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்ச்தரணி என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்தோ திபெத் எல்லை போலீசார் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், அமர்நாத் குகைக் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமர்நாத் பக்தர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையை 011-23438252, 011-23438253 என்ற எண்களிலும், காஷ்மீர் பிரிவை 0194-2496240 என்ற எண்ணிலும், அமர்ந்தா குகைக் கோயிலை 0194-2313149 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.