எங்கள் வீட்டில் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதாகவும், குப்பை தரம் பிரிக்கும் சவாலில் துணை மேயர் மற்றும், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை பங்கேற்க அழைப்பதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் கலந்து கொண்டார். பின்னர் என் குப்பை எனது பொறுப்பு என்கின்ற தலைப்பில் மாபெரும் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை அவர் திறந்து வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, மேயர் தனது வீட்டில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டார். மேலும் ஒரு மாதம் நடைபெறும் இந்த குப்பை தரம் பிரிக்கும் போட்டியில் பொதுமக்களும் கலந்து கொண்டு வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு கூடைகளில் பிரித்துக் கொடுத்து என் குப்பை எனது பொறுப்பு என்ற இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த மாபெரும் குப்பை தரம் பிரிக்கும் சவாலில் துணை மேயர் மகேஷ் குமார்,மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மகேஷ் நந்தசபாபதி ஆகியோரை பங்கு கொள்ள அழைப்பதாகவும் மேயர் பிரியா தெரிவித்தார். எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி ஆறுமுகம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
– இரா.நம்பிராஜன்